செவ்வாய், 13 நவம்பர், 2012

நத்தைச் சூரி கற்பம் - கருவூரார்

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர்கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
  செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
  சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
  சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.

சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
  சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
  நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
 ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
 

 மைந்தனே மலைகளெல்லாம் நொருக்கலாமே.


நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
  நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
 நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
  நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
  நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே
.

                                           -கருவூரார் பலதிரட்டு 300


பொருள்:       

  உலகத்தில் உள்ள எல்லாவகை மூலிகைக்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. இதன் மகத்துவத்தை அறிந்த பெரியோர்கள் இக்கற்பத்தை உட்கொள்வார்கள். எட்டு சித்துக்களும் இதற்குள்ளாகும்.

நத்தைச் சூரியைத் தினமும் உண்டுவர உடல் இறுகும். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரிக்கு காப்புகட்டி  பிடுங்க வேண்டும். அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்து முழுச்செடியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சம அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்ண நூற்றி இருபது நாள் ஒரு நாளாகும்(நீண்ட ஆயுள் உண்டாகும்). அதிக வலிமை உண்டாகும். நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகும்.


நத்தைச் சூரி விதையைத் தினமும் சாப்பிட்டு வர நூறூழி காலம் இருக்கலாம்(நெடுங்காலம்). அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகும். இக்கற்பம் இருக்கும் போது வேறு கற்பங்களை தேடாதே இதனால் வியாதிகளும், எதிரிகளும் நம்மை நெருங்கமுடியாது. இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். நத்தைச் சூரி மூலிகையை தலையில் வைத்துக்கொள்ள தேவதைகள் வசியமாகும் என்கிறார் கருவூரார்.
                                                
 பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A