வியாழன், 3 ஜனவரி, 2013

பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர்


மனிதனாக பிறந்த நாம் அறிந்து
அறியாமலும் நித்தம் பல
பாவங்களை செய்து கொண்டுதான்
இருக்கிறோம். அதன் பயனாய்
வறுமை, உடல் நலக்குறைவு,
காரியத்தடை, தீராத கவலை என
எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். அப்படி நம்மை பாடாய்படுத்தும் அந்த பாவங்களை களைய வழியே இல்லையா?, செய்த பாவங்களுக்கு பிரயாசித்தம்தான் என்ன? இனியாவது மனம் திருந்தி நல்வழியில் வாழ்ந்து மோட்ச நிலையை அடையமுடியாதா? என ஏங்குவோரும் நம் முன்னோர்கள் செய்த பாவங்களால் பிள்ளை இல்லாமல் போவது, குடும்பம் வறுமையிலே இருப்பது, அனைத்திலும் தோல்வி உண்டாதல், தீராத நோய்க்கு ஆட்படுதல் கை,கால் ஊனமாதல், மூளை வளர்ச்சி இன்மை, அற்ப ஆயுளில் மரணம் ஏற்படுதல் போன்ற பாவவினைகளை அனுபவிப்பவர்களும் இனியாவது மனசுத்தியோடு நீண்டகாலம் நிம்மதியாக வாழ்ந்து மோட்ச நிலையை அடைய இப்பதிவு ஒரு விளக்கின் ஒளி போல உங்களுக்கு வழிகாட்டடும்.



       பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர்

காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
 புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
 பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்
 ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.

காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே
காலறிந்து யோகமதால் அங்லங்கென்று
நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று
நீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்
வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்
வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே.

                                               -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
          
 உங்களின் பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன்
கேளுங்கள், நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும்
யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும் உங்கள்
வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும்
அதை தடுக்காமல் போவதும்( கண்ணாரக் கண்டபாவம்),
 தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை,
அவச்சொற்களை கேட்பது(காதாரக் கேட்டபாவம்)
உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை
துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்) பெண்களை
கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவது ஓரறிவு முதல்
ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின்
முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள்
இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு சூட்சம
மந்திரத்தைசொல்கிறேன் கேளுங்கள்.

உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து
(இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு
நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு
மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு
மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை
108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற
பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி விடும்
என்கிறார் அகத்திய மாமுனிவர்.

                                                         பகிர்வில் S.கலைச்செல்வன் M.A