திங்கள், 1 அக்டோபர், 2012

ஞான சரநூல்


     உலக மக்கள் உய்யும் பொருட்டு சங்கரனார் திருவுளம் மகிழ்ந்து அன்னை உமா மகேசுவரிக்கு அருளிய ஞான சர நூல் இதுவாகும். இதில் வாசியினைப் பற்றி மிகத் தெளிவாக சங்கரனார் அருளியுள்ளார். எந்த வேளையில் என்ன சரம் ஓட வேண்டும். மாறி ஓடினால் என்ன செய்ய வேண்டும். காரியத் தடைகள் நீங்க எப்படி சரம் பார்த்து நாம் நடக்க வேண்டும் என்பன போன்றவை கூறியுள்ளார். எமக்கு தெரிந்த முறையில் விளக்கம் கூறியிருக்கிறோம். இதனைப் படிக்கும் அன்பர்கள் சரியான முறையில் கருத்தினைத் தெரிந்து இதனை அனுபவத்திற்கு கொண்டு வரவும். அல்லது சரியான குருவின் உதவியினைப் பெற்று அனுபவத்திற்கு கொண்டு வரவும்.


 
நூற் பயன்.
சந்திரபானிலக்கணமுங் கோளுநாளுர்
தயங்கியபக்கங்கரண மியோகவாரம்
வந்துசொல்லுஞ்சோதிடத்தை யறியாதார்கண்
மனநினைவாயறியும்வகை யுளதோவென்ன
விந்தவுடலுயிர்நிலையை யறியாதார்க்
கியாமறியவியம்புவதை யாதோவென்னிற்
பைந்தொடியேயான் சொலுஞ் (“) சரநூறன்னைப்
பரிந்துநீபாரென்று பரமன்சொல்வார்.  -- 1

 

சந்திரன்-சூரியன்-இலக்கிணம்-கோள்-நாள்-பட்சம்-கரணம்-யோகம்-வாரம் இவை முதலாக சொல்லப்பட்ட சோதிட சாத்திரத்தை அறியாதவர்கள் தங்கள் மன நினைவினால் அறியும் வழி உள்ளதோ என உமையவள் கேட்க, பைங்கொடியாளே இந்த உடல்-உயிர் நிலையை அறியோதார்க்கு நான் சொல்வது நான் சொல்லும் இந்த சர நூலை பரிவுடன் பார்க்க என்று பரமன் கூறினார்.
(“) சரம் என்பது காற்று-சுவாசம்-மூச்சு-மனம்-சீவன்-பிராணன்-ஆவி-உயிர் இவை முதலாக சொல்லப்பட்டது என அறியவும்.

 

சொல்லருநெடுங்கயிற்றின் வருணமான
சூரத்தினார் துவக்கெனுமா சீர்மந்தன்னி
னல்லாருமூக்கணாங் கயிறுகோத்து
கலந்தீங்காய்வருகின்ற நஞ்சுட்கொண்டு
பொல்லாதகாலப்பாம் புண்டுமிழ்ந்து
பூதலத்திற்பிறந்திறந்து போவரேனு
மெல்லாருமியாஞ்சொல்லுஞ் சரநூற்றன்னை
யிகழா தார்சுரர்மூங்க ரிகழ்வோர் தாமே
.  -- 2


சொல்லற்கரிய மூக்கணாங் கயிற்றின் மூலம் எருதினை கட்டுப்படுத்துவது போல சரமானது நன்மை தீமை எனும் பூர்வ ஜென்ம கர்மாவிற்கேற்ப மனிதரைக் கட்டுப்படுத்தும். அதனடிப்படையில் காலப்பாம்பானது நஞ்சினை உண்டு உமிழ்வது போல மனிதர்கள் பிறந்து இறந்து போவார்கள். நான் சொல்லும் இந்த சர நூலை இகழாமல் முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் தேவராவர். இகழ்பவர்கள் நரகத்தை அடைவர்.


ஆசன விதி
மூங்கிற்பாய்மிடிகல்லு நோய்மண்டுக்க
முறுபலகைநன்மையிலை முடைந்தபுல்லு
நீங்கிவிடும்கீர்த்திதழை மனநடுக்க
நிகரில்லைத்தொல்ஞான நிறைபுலித்தோ
லோங்கியசெல்வம்வீடு முன்குகைப்பு
லொளிர்தூசுநன்மையுயர் படந்தானென்று
தூங்கியதூக்கம்போக்கு நன்மையாகத்
துலங்கியவாதனத்திருந்து தொகைசொல்வாம்.  -- 3

மூங்கிற் பாய்--வறுமை, கல்--நோய், வெறும்மண்--நடுக்கம்--துக்கம், உடைந்த அல்லது அறுபட்ட பலகை—நன்மையில்லை, கோரை போன்ற புற்பாய்கள்--கீர்த்தி நாசம், பச்சை இலை தழை—மனநடுக்கம், மான்தோல்---ஞானம், புலித்தோல்---செல்வம், தர்ப்பை---மோட்சம், வெள்ளை துணி---தீமையில்லை இப்படியாக தீiமில்லாத நன்மையான ஆதனத்திலிருந்து சரம் பார்க்கவும். மேலும் சொல்வேன் மயில் போன்ற அழகிய பெண்ணே.

சரம் பார்க்கும் மார்க்கம்.சொல்லியவாதனங்கள்பல வவற்றுணன்றிற்
றுய்யபங்கயாதனமா யிருந்துதோன்று
மல்லறுத்தேகமன மாக்கியொட்டி
யானபந்தபிரணாயா மங்கள்பண்ணி
மெல்லையினுந்தீயின்கீழா மெழுத்தைப்பற்றி
எழுபத்தீராயிரநா டியிலீரைந்து
நல்லனவாயதின்மூன்று நாடியோடு
நலந்தரும்பேரவ்வெழுத்தை நவிலப்பாரே.  -- 4

மேலே சொல்லப்பட்ட ஆதணங்களில் தீமையில்லா ஆதனம் ஒனறை தெரிவு செய்து அதில் பத்ம ஆசனத்தில் அமர்ந்து சிந்தனையாய் இரு. அப்பொழுது மனதில் பலவித அல்லல் தரும் நினைவுகள் வரும். அவற்றை விலக்கி ஒரே மனதாக பிரணாயாமம், ஒட்டியாண பந்தம் செய்ய உந்தியில் மூலத்தீ பற்றும். அதன் எழுத்து தோன்றும். எழுபத்தீராயிரம் நாடிகளில் முக்கியமானவை பத்து. அதில் மிக முக்கியமானது மூன்று இந்த மூன்று நாடிகள் வழியாக பெரிய நன்மைகள் தரும் அந்த எழுத்தை பார்.

நவ்விவிழியாயிதய கமலந்தன்னி
நன்றாகவசவையுயிர் நடக்கும்போது
செவ்வையுடன்மீளும்போ திருபத்தோரா
யிரத்தறுநூற் றச்செபிக்குநாளாகு
மவ்வியமூலாதாரஞ் சுவாதிட்டான
மணிபூரகம்நாகதம் விசுத்தியாக்ஞை
பவ்வமறயாஞ்சொல்லும் சரநூறன்னைப்
பார்ப்பவரேபராபரத்தின் பயன்பார்ப்பாரே.  -- 5

மான் விழிப்பெண்ணே! இதயக் கமலதன்னில் இந்த அசபை உயிர் நடக்கும் போது செம்மையாக திரும்பும் போது இருபத்தோராயிரத்து அறுநூறு தரம் நடக்கும். இந்த அளவு சுவாசம் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களிலும் மாறி மாறி நடக்கும். இந்த சர நூல் தன்னை தெளிவாக பார்ப்பவர் இதன் பயனை தெளிவாக புரிந்து கொள்வர்.


பார்க்கிலிடையிடமதுவே திங்களாகும்
பகலவனாம்பின்கலையே வலமதாகும்
மேற்கவுரைசுழுமுனைதா யடுவாமங்கி
யிடையானசந்திரனே யமுதமாகுந்
தீர்க்கமுடன்பொருள்விளைக்குங் கரியவண்ணந்
திரராசியாமவனே செப்புங்காலை
வேற்றடங்கண்மடமாதே விரும்பிக்கேளாய்
விரிவாகவிவையனைத்தும் விளங்கச்சொல்வாம்.  -- 6

இடது பக்க நாசியில் வரும் சுவாசம் இடகலையாகும். இது சந்திரனாகும். வலது பக்க நாசியில் வரும் சுவாசம் பின்கலை ஆகும். இது சூரியனாகும். இவை இரண்டும் சேர்ந்து நடுவில் நிற்பது சுழுமுனை எனப்படும். இது அக்னி ஆகும். சந்திரனே அமுதமாகும். பொருள்கள் உண்டாக்கும். கரிய வண்ணத் திரராசியுமாம். வேல் போன்ற கூரிய கண்களையுடைய பெண்ணே விரிவாகவும், விளக்கமாகவும் சொல்வோம் விருப்பமுடன் கேட்பாயாக.

 

சொல்லுங்காற்கதிரவனுஞ் சுகவியாபி
சுத்தநிறம்வெண்மைசர ராசியாகும்
கொல்லுமேலாக்கருமங்கள்கொடியவன்னி
கூறுங்கா னிறஞ்சிகப்பா முபயராசி
நல்லவிடைதெரி;ந்துணர்கிற் றிங்கள்பெண்ணாம்
நலம்பயில்பின் கலைகதிரோன் புருசனாகுஞ்
சொல்லுமிரு பதின்காத வழிக்கப்பாலாந்
திசைக்கிடமாய்ச் செவ்வலமூர் சேரக்கேள்.  -- 7


 

கதிரவன் பற்றி சொல்லுவதானால் சுகமாக எல்லா இடமும் வியாபித்திருப்பவன். சுத்தமான வெண்மை நிறத்தினன். சரராசியாகும். கொடிய அக்னி ஆகிய சுழுமுனையோ எல்லா கருமங்களையும் கொல்லும். சிப்பு நிறத்துடன் உபய ராசியாகும். சந்திரன் பெண். சூரியன் ஆண். இருபது காத தூரத்திற்கப்பால் உள்ள இடத்திற்கு பிரயாணம் மேற் கொள்ளும் போது சந்திர கலை ஓடும் போது பிரயாணத்தை ஆரம்பித்து, சூரிய கலை ஓடும் போது அங்கு போய்ச் சேருமாறு இருக்க வேண்டும். மேலும் சொல்வேன் கேள்.

 


கேட்கிலிடந்தூதாடை யணிபொன்பூணற்
கிளக்குணமடிமைகொளற் கீழ்நீர்கண்டால்
வாழ்க்கைமனையெடுத்தல்குடி புகுதல்விற்றன்
மன்னவரைக்காணலுண்மை மருவல்சாந்தி
வேட்கைதெய்வப்பதிட்டைசுரம் வெறுப்புத்தீர்த்தல்
வித்தைபெறற்றனம்புதைதன் மிகவுமீத
னாட்கமலர்முகத்தாய் நரகந்தீர்த்த
னன்றேயாமிவையெல்லா நயந்துபாரே.  -- 8


 

இடகலையான சந்திர கலையில் சுவாசம் நடக்கும்போது என்னென்ன காரியங்கள் செய்யலாம் எனக் கேட்டால் தூது அனுப்புதல் அல்லது தூது போதல். புத்தாடை அணிதல். பொன் ஆபரணங்கள் பூணுதல். ஒருவனை அடிமையாக பெற்றுக் கொள்வது அதாவது வேலை ஆள் வைப்பது. கிணறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகள் வெட்டுதல். வாழ்க்கை அமைத்தல் அதாவது திருமணம் தாலி கட்டுவது, வீடு கட்டுவது. வீடு வாங்குவது. வீட்டிற்கு குடி புகுவது. பொருள் விற்பது. அரசரைக் காண்பது. இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்திப்பது. உண்மையை சாருதல் அதாவது தெய்வ வழிபாடு. சாந்திகள் செய்வது. தெய்வ பிரதிட்டை செய்தல். சுரம், வெறுப்பு(சமாதானம் செய்தல்) தீர்த்தல். வித்தை கற்றல். தனம் சேர்த்தல். பாவ விமோசனம் கொடுத்தல். தாமரை மலரைப் போன்ற முகத்தினை உடைய பெண்ணே இவை எல்லாம் நன்மை தரும்.

 

 

பார்க்கில்வலதுபதேம் வித்தைசேவை

படையோட்டல் பயிர்செட்டுக்களவுசூது
பேர்க்கவொணாவழக்குரைத்தல் கரியரிதேரூர்தல்
யிறங்குமெழுத்திடுதல்சங் கீதம்பாடல்
வார்த்தைபகைபங்கள்கோள் பசாசுதீர்த்தன்
மந்திரஞ்சாதித்தன்மருந் துணலுறங்கற்
கோர்த்தபுனலாடல் கொல்லிடங்கடீர்தல்
கொடும்பிணித்தம்பனயோகங் குறிக்குங்காலே. – 9

வலது நாசியில் (பின்கலை -- சூரியகலை) சரம் ஓடும் போது என்னென்ன காரியங்கள் செய்யலாம் என்றால் குருவினடம் உபதேசம் பெறல். பிறரிற்கு உபதேசம் செய்தல். வித்தை சொல்லிக் கொடுத்தல். படையை துரத்துதல். பயிர் விளைவித்தல். வியாபாரம். திருடுதல். சூதாடுதல். கடினமான வழக்காடுதல். யானை-குதிரை தேரோட்டுதல். உபதேசக் கருத்தெழுதுதல். சங்கீதம். சொற்பொழிவு ஆற்றல். பகை உண்டாக்கல். கோள் சொல்லுதல். பங்கம் ஏற்படுத்துதல். பேயோட்டுதல். மந்திர செப சாதனைகள். மருந்து சாப்பிடுதல். உறங்குதல். குளித்தல். கொல்லுதற்குரிய ஏவல் நிவர்த்தி செய்தல். கொடிய நோய் தீர்த்தல். தம்பனம் சம்பந்தமான யோகங்கள் செய்தல்.  

 

காலிரண்டுமொத்தக் காற்சமாதிநன்றாங்
கருதியதொன்றாகாது காணுமெனிற்காணா
சீலமிகுநததவமுடையாய் நன்மையில்லை
தீயனவாங்கருமஞ் சேரக்கூடுஞ்
சாலநிறைபூரணத்தில் வழக்குவாது
தர்க்கம்போரங்கமன்னர் தம்மைகாண்டன்
மூலமறுஞ்சூரியத்தி னிறுத்திவெல்வர்
முயலவதெல்லாங்கயல்விழியால் முயலலாமே. – 10

இரண்டு சரமும் சேர்ந்த சுழுமுனையில் சரம் ஓடுகையில் சமாதி யோகம் செய்தல் நன்மை தரும். நினைத்த காரியங்கள் ஒன்றும் நடக்காது. இப்படிப்பட்ட நேரத்தில் நடக்கும் என நினைத்தால் நடக்காது. சீலம் பொருந்திய தவமுடைய பெண்ணே! தீய காரியங்கள் கை கூடும். சரம் ஓடும் பக்கம் பூரணம் என்றும் ஓடாத பக்கம் சூனியமும் ஈகும்.நிறைவான பூரணத்தில் நின்று வழக்கு பேசுபவரகளை, தரக்கம் செய்பவர்களை சரமோடாத சூனியத்தின் பக்கம் நிறுத்தி வெல்லலாம். இப்படி முயன்று காரயங்களை வெல்லலாம் கயல் போன்ற விழிகளை உடைய பெண்ணே.

 

முயலுங்கரமற்பூரணத்தி லிடத்திலிரண்டடியோ
முன்வலமென்மூன்றடி போமொழியாம்யாத்திரைக்கு
கயலடருங்கண்மடவாய் கருமமதுமுற்றுங்
கருதுவடக்குங்கிழக்கு மிடத்தேபோகி
லியலுமொருபகையுண்டா மீளமாட்டா
ரிசைந்தவலந் தெற்குமேற் கேகவென்னிற்
புயலடரும்புனல்புகுந்து மரணமாவர்
புணர்முலைக்கச்சிறுமிடையாய் போற்றிக்காணே. – 11

தெற்கும் மேற்கும் சந்திரனின் திசைகளாகும். இந்த திசைகளில் பயணம் போக வேண்டும் ஆயின் இடகலையில் சரம் ஓடும் போது செல்ல வேண்டும். அப்படியல்லாமல் மாறி பின்கலையில் சரம் ஓடினால் சூரிய கலையிலேயே சுவாசத்தை நன்றாக இழுத்து கும்பகம் செய்த படி வலது காலை மூன்று அடி வைத்து பின் சாதாரணமாக சிறிது தொலைவு நிற்காமல் செல்ல வேண்டும். இதுவே பரிகாரமாகும். வடக்கும், கிழக்கும் சூரியனின் திசைகளாகும். இந்த திசைகளில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் சூரிய கலையில் சுவாசம் நடக்கும் போது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படியல்லாமல் மாறி இடகலையில் சுவாசம் நடக்குமாயின் சந்திர கலையிலேயே சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து கும்பகம் செய்து இடது காலை இரண்டடி எடுத்து வைத்து பின் சாதாரணமாக சிறிது தூரம் நடக்க பரிகாரமாகும். கயல் போன்ற கண்ணுடைய பெண்ணே இப்படிச் செய்யின் போகின்ற காரியம் இனிதே நிறைவேறும். அப்படியல்லாமல் இடகலையில் சரம் ஓடும் போது வடக்கு கிழக்கு திசைகளிற்கு பிரயாணம் செல்லின் போகின்ற இடத்தில் தேவையற்ற வீண் பகை வரும். திரும்பி வரமாட்டார். பின்கலையில் சரம் நடக்கும் போது தெற்கு, மேற்கு பிரயாணம் மேற்கொள்ளின் புயலினாலும், நீரினாலும் மரணமேற்படும். சிறிய இடையினைக் கொண்ட பெண்ணே இதனை போற்றி அதாவது நம்பிக்கையுடன் காண்பாயாக.

 

 

காணவொருகருமத்தைக் குறித்துவந்தேன் கருதியமுன்னுமிடமு மேலுமிந்து
பேணுவலமுங்கீழும் பின்னும்வெய்யோன்
பேசியசொல்லெழுத்திரட்டை சோமனாகு
மாணுமெழுத்தோற்றையோர் கதிரோனாகு
மதிக்குமவன்பூரணத்தில் விந்துகேட்கிற் பூணவுரைத்தனவெல்ல நன்றேயாகு
பொல்லாதுசூனியத்திற் புகலுவோர்க்கே. – 12

 

ஏதாவது ஒரு விடயமாக குறி கேட்க வரும் போது குறி சொல்பவரிற்கு சூரிய கலை நடக்கின் கேட்க வந்த காரியம் செயமாகும். குறி சொல்பவரிற்கு சந்திர கலை ஓடும் போது குறி கேட்பவர் அந்த பக்கம் இருந்து கோட்டால் காரியம் செயமாகும். மற்றும் சரம் பார்ப்பவரிற்கு மேலிருந்து கேட்டாலும் அல்லது நேரிற்கு நேராக கேட்டாலும் காரியம் பலிதமாகாது. கேட்ட கேள்வியின் முதல் வார்த்தையின் எழுத்துக்களை எண்ணி ஒற்றை இலக்கமாயின் நல்ல பலனும், இரட்டை இலக்கமாயின் தீய பலனும் என்றாகும்.

 

 

கேடொன்றோன்பறிகொடுத்தோனஞ்சுதின்றோன்
கிடையினாற்சாவவன்றோ கிளர்நோய்கொண்டோன்
பாடொன்றுமில்லைசூ னியத்தேயாகிற்
பலித்துவிடும்பூரணத்திற் பகர்;ந்தவெல்லாம்
ஆடும்பையரவென்ன வல்குலாளே
யடுத்தொருவன் வந்ததிசைசோமனாகி
நீடுஞ்சொல்லிரவியாய் நிற்குமாகில்
நினைத்தமொழியாகாது நின்றுபாரே. – 13

குறி கேட்பவன் நான் கெட்டு போய் கொண்டிருக்கிறேன் என்றாலும், பொருள் களவு போனது என்றாலும், நஞ்சு சாப்பிட்டேன் என்றாலும், நான் சாகப் போகிறேன் என்றாலும், எனக்கு கடுமையான நோய் என்றாலும் சூனியத்தின் பக்கம் நின்றால் பெரிய பாதகமில்லை சரியாகிவிடும். பூரணத்தின் பக்கம் நின்றால் அது அப்படியே பலிக்கும். அதாவது படமெடுத்து ஆடும் அரவு தெளிவாக கண்ணுக்கு தெரிவது போல தெளிவானதாகும் வலிய கூந்தலையுடைய பெண்ணே. முதற் கவியில் சொல்லிவற்றையும் பார்த்து சந்திரனின் திசை, ரவியின் திசை இவற்றையும் பார்த்து காரியத்தின் வீரியம் அறிய வேண்டும். அதாவது உத்தம பலன், மத்திம பலன் போன்றன.

                                                                                                                                        பகிர்வில் S.கலைச்செல்வன்
                                                                                                                                                     -அறிவுமையம்-

6 கருத்துகள்:

 1. நண்பருக்கு வணக்கம்,! தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த சரநூல் பற்றி மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள விழைகிறேன்.அல்லது இந்த நூல் கிடைக்குமா! தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். krishalina@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞானசர நூல் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள கீழ்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுகள் நேரிலோ அஞ்சல் வழியிலோ உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்
   தாமரை நூலகம்
   சென்னை
   9940073194
   நன்றி

   நீக்கு
 2. uoorai kedukkum manitha perichaligalai azhikka vazhi unnada manthiram unda nanpaa irunthal anuppungal nanpaa ennai sivanaaga paavithu kondu samkaaram seithuvidukien lovep6924@gmail.com plz nanpa

  பதிலளிநீக்கு