சனி, 1 டிசம்பர், 2012

கணபதி வசிய மந்திரம் - அகத்தியர்


நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.

ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
                                      

                                                அகத்தியர் பரிபூரணம் 1200

 
பொருள்:
வசியம் முதல் மாரணம் வரையிலான எட்டுவகை கர்மங்களையும் சித்திசெய்வதற்க்கு ஒரு வழி சொல்கிறேன் கேள்,
அது என்னவென்றால் அது கணபதியின் தியானமாகும். அதை செய்யும் முறை யாதனில் முதலில் ஒரு செப்புத்தகட்டில் ஒரு வட்டம் போட்டு அதனுள் ஓம் என்று எழுதி அந்த ஓம் என்பதற்க்குள் ஸ்ரீ என்று எழுதவும். இந்த சக்கரத்தை கணபதியின் முன்னே வைத்து பூசை பொருட்களும் வைத்து முறையாக பூசை செய்து பின்பு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவ நடுமையத்தில் மனதை நாட்டி "ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீகுரு கணபதி சுவாகா" என்ற மந்திரத்தை பதினாறு உரு செபித்தால்  கணபதி ஒளி வடிவில் உனக்கு காட்சி தந்து உனக்கு வசியமாவார். அப்படி கணபதியை வசியம் செய்தவர்கள் அஷ்டகர்மயோகம் செய்தால் அது அவருக்கு சித்தியாகும். மேலும் அறுபத்து நான்கு சித்துக்களும் செய்யும் வல்லமை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

                                              பகிர்வில் S. கலைச்செல்வன் M.A