ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மெய்ஞானம் - காகபுசுண்டர்


ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் மெய்ஞானம். தன்னையும் பரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணில் காண முடியாத சூட்சுமப் பொருள் என்றும் அதைக் கண்ணால் காண முடிகின்ற தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக் காண வேண்டுமானால் உன் உடம்பிலேயே அதனை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம் ஒன்று அடங்கியிருக்கும் சூட்சுமத்தையும் பசுவின் பாலிலே நெய்
கலந்திருக்கின்ற தன்மையையும் பூவினுள்வாசனை கலந்திருக்கின்ற நிறம்
கலந்திருக்கின்ற உத்தியையும், மயில் முட்டையில் அழகான பலவண்ண
தோகை ஒளிந்திருக்கின்ற ரகசியத்தையும் நீ உணர்ந்து கொள்வாயானால் உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.

அகங்காரம் காரணமாக இதை மறந்து இதைக் கண்டறிவதற்கான சாதனத்தையும் நீ மறந்து விடுவாயானால் உனக்கு அபரோட்சஞானம் கிட்டாது. பரமாத்மாவுடன் ஒன்று படும் முக்தி நிலையும் உனக்குக் கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

ராம நாமத்தின் பெருமை


“அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”

என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர்.

அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார் சிவவாக்கியர்.
சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த வளர்ச்சியடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.