கோரக்கர் தனது சந்திரரேகை என்னும் நூலில் பதினெட்டு சித்தர்கள் உண்ட கற்பத்தை பற்றியும் அக்கற்பத்தைக் கொண்டு இரசவாதம்(தங்கம்) செய்யும் முறையினையும் தம் பாடலில் கூறியுள்ளார்.
கானென்ற காயகற்ப வாத சூட்சம்
கழறிடுவேன் பதினென் பேருண்டதாமே
உண்டதொரு கற்பமிதை யுரைப்பேனிங்கு
வண்மையுறத் திருநீற்றுச் சாறுதன்னால்
வலுவாகத் திரிநாளும் ஆட்டிப்பின்னர்
பண்டுபோல் வட்டுச் செய்து ரவியுலர்த்திப்
பாங்காகக் குக்குடமாம் புடமும் ஐந்து
செண்டு போல் இட்டெடுக்கச் சுண்ணமாகும்
சித்தர்களும் கண்டுவிட்டால் கொண்டே போவார், (145)
கொண்டவர்கள் போகாமல் இருப்பதற்கு
ஓம் அம் உம் லம் மென செபிக்கக்
கண்டுனைச் சித்தர்களும் வரங்கள் ஈவார்
உண்டிடுவாய் மண்டலமே ஆவின் நெய்யில்
உலையாது கற்றூண் போல் திரேகங்காந்தி
சண்டனில்லை வாதமெண் பதுவும் போகும்
சார்ந்திடவே புளிபோகம் அகற்றிக்காரே, ( 146 )
கார்த்திடவே குண்டலிதான் வாசிதானும்
களங்கமற்று வலுவாகிச் சோதி தங்கும்
பூர்த்தியுற்றுப் பூரண்மே லமுதம் பொங்கிப்
புகழ்பெரிய ஞானசித்தன் நீயே யாவாய்
கீர்த்தியுற்றுப் பதினெண்பேர் கொண்ட கற்பம்
கூறினேன் வாதிகளே விளம்பக் கேண்மின்
நேர்த்தியுடன் சுத்தித்த வெள்ளி செம்பில்
ஈந்திடவே சிங்கிச் சுண்ணம் மாற்றெட்டாமே (148)
- கோரக்கர் சந்திரரேகை
பொருள்:
பதினெட்டு சித்தர்களும் உண்ட காயகற்பத்தை பற்றியும் அதைக்கொண்டு இரசவாதம் செய்யும் சூட்சமத்தையும் உரைக்கிறேன் கேள்,
மிருதார் சிங்கி - 1 பலம்(35-கிராம்) எடுத்து அதில் திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும், மறுநாளும் புதிய திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைக்கவும் இப்படியாக மூன்று நாட்களும் புதிய இலைச்சாறு விட்டு நன்றாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சூரிய ஓளியில் காயவைத்து எடுக்கவும்.
பின்னர் இதனை ஐந்து முறை குக்கிட புடமிடவும்(10-எருவில் எரிப்பது) பின்பு எடுத்துப்பார்த்தால் அது சுண்ணமாகி இருக்கும் இதுவே சிங்கிசுண்ணமாகும். இதை சித்தர்கள் கண்டால் எடுத்துப்போய்விடுவார்கள் , அப்படி அவர்கள் எடுத்துப் போகாமல் இருப்பதற்கு '' ஓம் அம் உம் லம் " என்று 100 உரு செபிக்க வேண்டும். இப்படி செபித்தால் உன்னை காணும் சித்தர்கள் உனக்கு வரங்கள் கொடுப்பார்கள்.
இச்சிங்கி சுண்ணத்தை காலை - மாலை என இருவேளையும் பசு நெய்யில் குழப்பி ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டால் தேகம் கல்தூண் போல் இறுகும், உடலில் தேஜஸ் கூடும், எண்பது வகை வாதநோய்ளும் விலகிப்போகும். இம்மருந்தை உண்ணும் வேளையில் புளி, பெண்போகம் நீக்க வேண்டும்.
இம்முறையில் ஒரு மண்டலம் உண்டவர்களுக்கு குண்டலினி மேல் எழும்பும்,வாசி வலுப்பெறும், உடல் சோதி மயமாய் பிரகாசிக்கும். சகஸ்காரத்திலிருந்து அமுதம் பொங்கும். இதனால் நீ பெரிய ஞானசித்தன் ஆவாய், புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்களும் உட்கொண்ட கற்பம் இதுவாகும்.
மேலும் இரசவாதிகளே உங்களுக்கு இக்கற்பம் பயன்படும் வகையினை தெளிவாக சொல்கிறேன்,கேளுங்கள். சுத்தி செய்த வெள்ளி, செம்பு இவைகளுடன் இச்சுண்ணத்தை சேர்த்து உருக்கினால் எட்டு மாற்று தங்கம் கிடைக்கும் என்கிறார் கோரக்கர்.
பகிர்வில் S.கலைச்செல்வன்.B.Litt, M.A
அறிவுமையம்