செவ்வாய், 13 நவம்பர், 2012

நத்தைச் சூரி கற்பம் - கருவூரார்

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர்கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
  செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
  சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
  சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.

சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
  சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
  நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
 ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
 

 மைந்தனே மலைகளெல்லாம் நொருக்கலாமே.


நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
  நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
 நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
  நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
  நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே
.

                                           -கருவூரார் பலதிரட்டு 300


பொருள்:       

  உலகத்தில் உள்ள எல்லாவகை மூலிகைக்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. இதன் மகத்துவத்தை அறிந்த பெரியோர்கள் இக்கற்பத்தை உட்கொள்வார்கள். எட்டு சித்துக்களும் இதற்குள்ளாகும்.

நத்தைச் சூரியைத் தினமும் உண்டுவர உடல் இறுகும். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரிக்கு காப்புகட்டி  பிடுங்க வேண்டும். அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்து முழுச்செடியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சம அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்ண நூற்றி இருபது நாள் ஒரு நாளாகும்(நீண்ட ஆயுள் உண்டாகும்). அதிக வலிமை உண்டாகும். நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகும்.


நத்தைச் சூரி விதையைத் தினமும் சாப்பிட்டு வர நூறூழி காலம் இருக்கலாம்(நெடுங்காலம்). அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகும். இக்கற்பம் இருக்கும் போது வேறு கற்பங்களை தேடாதே இதனால் வியாதிகளும், எதிரிகளும் நம்மை நெருங்கமுடியாது. இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். நத்தைச் சூரி மூலிகையை தலையில் வைத்துக்கொள்ள தேவதைகள் வசியமாகும் என்கிறார் கருவூரார்.
                                                
 பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

செவ்வாய், 6 நவம்பர், 2012

பாதாள அஞ்சனம்


                                        குப்பைமேனி வேர், வெள்ளைச்சாரணைவேர்

                                      வெள்ளெருக்கன்வேர், வெள்ளைக்காக்கணம் வேர்

                                                            வெள்ளைவிஷ்ணுகாந்திவேர்


      இவை ஐந்தையும் முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர்த்தி தீயில் கறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம், குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்கண்ட வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டான் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன்பின் புனுகு, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ இவைகளை வகைக்கு குன்றிமணி அளவு சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் ஆனதின் அடையாளம் தெரிய கல்வத்தின் அடியில் ஒரு ரூபாயை போட்டு அரைத்தால் அது மையில் தெரியும்.
                                                             
                                               
இதற்கு பூஜை மந்திரம்
 
ஓம் ஹ்ரிம் ஐம் மதன மேகலே மமகார்யம் ஸாதய ஸாதய ஸ்வாஹா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் பனிரெண்டு நாள் செபித்தால் மை உயிர் பெறும்.அதன் பின் தான் உபயோகத்திற்கு ஆகும்.

நிவேதனம் செவ்வலரி புஷ்பம், சந்தனம், பன்னீர், பால், பழம், இளநீர், தேங்காய், பத்தி, சூடம், தயிர், பொங்கல் ஆகியவைகளை வைத்து தூபதீபம் காட்டி மையை பத்திரம் செய்யவும்.

                                                                     இதன் பிரயோகம்

இந்த மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம்.தண்ணீர், ஊற்று, தண்ணீருக்குள் இருக்கும் பொருள், மண்ணில் புதைந்துள்ள புதையல் முதலியனயாவும் தெரியும்.இது பாதாள அஞ்சனம் என்பதால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

                      பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

ஞாயிறு, 4 நவம்பர், 2012

மூட்டு வலி,குறுக்கு வலி நீங்க ...

மூட்டு வலி நீங்க...

1)முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

2)மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.

குறுக்கு வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும். 

புதன், 31 அக்டோபர், 2012

வால்மீகி இராமாயணம் உருவானது எப்படி...?


தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.

அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும் இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார். அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது. அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும் சொன்னார்.

ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச்சி பொங்கக் கூறினார்.  அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான். ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோபமடைந்தார்.
வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன் அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான் ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.அதன் அடிப்படையில் உருவானதே வால்மீகி இராமாயணமாகும்.

பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt.M.A
அறிவுமையம்

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கூந்தல் வளர்ச்சி குறிப்புகள்-10


1)முடி வளர்வதற்கு:கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

*காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

2)முடி உதிர்வதை தடுக்க:வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

3)வழுக்கையில் முடி வளர:கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

4)இளநரை கருப்பாக:நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

5)முடி கருப்பாக:ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

*காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

6)தலை முடி கருமை மினுமினுப்பு பெற:அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

7)செம்பட்டை முடி நிறம் மாற:மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

8)நரை போக்க:தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
*முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

 
9)சொட்டையான இடத்தில் முடி வளர:நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

10)புழுவெட்டு மறைய:நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.                                           

                                             பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சகல வித்யா சரஸ்வதி மந்திரம்

                                         

                                       சகல வித்யா சரஸ்வதி மந்திரம்

  ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வாக்கு வாகினி வாகிஸ்பரி ஐம் கிலிம் சவ்வும்  மமவாக் சித்தம் குருகுரு சுவாகா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 21-நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

பூசை முறை: 

பால்,தேன்,மல்லிகை,புஷ்பம்,சந்தனம்,பத்தி,சூடம்,தேங்காய்,வடை,
சுண்டல் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்தால் மந்திரம் சித்தியாகும்.இதனால் தேவி தரிசனம் உண்டாகும்.அத்தேவி நம் நாக்கில் அட்சரம் எழுதும் இதனால் தானே பாடும் சக்தியும், சகல வியாகரணமும் உண்டாகும்,வேதாந்த இரகசியமும், சகல கலைஞானமும் வெளிப்படும், கவிதா சத்தியும்,வாக்கு சித்தியும் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.

             பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A                                அறிவுமையம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

பதினென் சித்தர்களுண்ட கற்பம் - கோரக்கர்

கோரக்கர் தனது சந்திரரேகை என்னும் நூலில் பதினெட்டு சித்தர்கள் உண்ட கற்பத்தை பற்றியும் அக்கற்பத்தைக் கொண்டு இரசவாதம்(தங்கம்) செய்யும் முறையினையும் தம் பாடலில் கூறியுள்ளார். 

 

கானென்ற காயகற்ப வாத சூட்சம்
கழறிடுவேன் பதினென் பேருண்டதாமே
உண்டதொரு கற்பமிதை யுரைப்பேனிங்கு
வண்மையுறத் திருநீற்றுச் சாறுதன்னால்
வலுவாகத் திரிநாளும் ஆட்டிப்பின்னர்
பண்டுபோல் வட்டுச் செய்து ரவியுலர்த்திப்
பாங்காகக் குக்குடமாம் புடமும் ஐந்து
செண்டு போல் இட்டெடுக்கச் சுண்ணமாகும்
சித்தர்களும் கண்டுவிட்டால் கொண்டே போவார்,
(145)

 

கொண்டவர்கள் போகாமல் இருப்பதற்கு
ஓம் அம் உம் லம் மென செபிக்கக்
கண்டுனைச் சித்தர்களும் வரங்கள் ஈவார்
உண்டிடுவாய் மண்டலமே ஆவின் நெய்யில்
உலையாது கற்றூண் போல் திரேகங்காந்தி
சண்டனில்லை வாதமெண் பதுவும் போகும்
சார்ந்திடவே புளிபோகம் அகற்றிக்காரே,
( 146 )      

 

கார்த்திடவே குண்டலிதான் வாசிதானும்
களங்கமற்று வலுவாகிச் சோதி தங்கும்
பூர்த்தியுற்றுப் பூரண்மே லமுதம் பொங்கிப்
புகழ்பெரிய ஞானசித்தன் நீயே யாவாய்
கீர்த்தியுற்றுப் பதினெண்பேர் கொண்ட கற்பம்
கூறினேன் வாதிகளே விளம்பக் கேண்மின்
நேர்த்தியுடன் சுத்தித்த வெள்ளி செம்பில்
ஈந்திடவே சிங்கிச் சுண்ணம் மாற்றெட்டாமே (148)                                           

                                                    - கோரக்கர் சந்திரரேகை
                                                            

பொருள்:

 பதினெட்டு சித்தர்களும் உண்ட காயகற்பத்தை பற்றியும் அதைக்கொண்டு இரசவாதம் செய்யும் சூட்சமத்தையும் உரைக்கிறேன் கேள்,


மிருதார் சிங்கி - 1 பலம்(35-கிராம்) எடுத்து அதில் திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும், மறுநாளும் புதிய திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைக்கவும் இப்படியாக மூன்று நாட்களும் புதிய இலைச்சாறு விட்டு நன்றாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சூரிய ஓளியில் காயவைத்து எடுக்கவும்.

 

பின்னர் இதனை ஐந்து முறை குக்கிட புடமிடவும்(10-எருவில் எரிப்பது) பின்பு எடுத்துப்பார்த்தால் அது சுண்ணமாகி இருக்கும் இதுவே சிங்கிசுண்ணமாகும். இதை சித்தர்கள் கண்டால் எடுத்துப்போய்விடுவார்கள் , அப்படி அவர்கள் எடுத்துப் போகாமல் இருப்பதற்கு '' ஓம் அம் உம் லம் " என்று 100 உரு செபிக்க வேண்டும். இப்படி செபித்தால் உன்னை காணும் சித்தர்கள் உனக்கு வரங்கள் கொடுப்பார்கள்.
இச்சிங்கி சுண்ணத்தை காலை - மாலை என இருவேளையும் பசு நெய்யில் குழப்பி ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டால் தேகம் கல்தூண் போல் இறுகும், உடலில் தேஜஸ் கூடும், எண்பது வகை வாதநோய்ளும் விலகிப்போகும். இம்மருந்தை உண்ணும் வேளையில் புளி, பெண்போகம் நீக்க வேண்டும்.


 இம்முறையில் ஒரு மண்டலம் உண்டவர்களுக்கு குண்டலினி மேல் எழும்பும்,வாசி வலுப்பெறும், உடல் சோதி மயமாய் பிரகாசிக்கும். சகஸ்காரத்திலிருந்து அமுதம் பொங்கும். இதனால் நீ பெரிய ஞானசித்தன் ஆவாய், புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்களும் உட்கொண்ட கற்பம் இதுவாகும்.

 

மேலும் இரசவாதிகளே உங்களுக்கு இக்கற்பம் பயன்படும் வகையினை தெளிவாக சொல்கிறேன்,கேளுங்கள். சுத்தி செய்த வெள்ளி, செம்பு இவைகளுடன் இச்சுண்ணத்தை சேர்த்து உருக்கினால் எட்டு மாற்று தங்கம் கிடைக்கும் என்கிறார் கோரக்கர்.

                        

 பகிர்வில் S.கலைச்செல்வன்.B.Litt, M.A
                                       அறிவுமையம்