சனி, 1 டிசம்பர், 2012

கணபதி வசிய மந்திரம் - அகத்தியர்


நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.

ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
                                      

                                                அகத்தியர் பரிபூரணம் 1200

 
பொருள்:
வசியம் முதல் மாரணம் வரையிலான எட்டுவகை கர்மங்களையும் சித்திசெய்வதற்க்கு ஒரு வழி சொல்கிறேன் கேள்,
அது என்னவென்றால் அது கணபதியின் தியானமாகும். அதை செய்யும் முறை யாதனில் முதலில் ஒரு செப்புத்தகட்டில் ஒரு வட்டம் போட்டு அதனுள் ஓம் என்று எழுதி அந்த ஓம் என்பதற்க்குள் ஸ்ரீ என்று எழுதவும். இந்த சக்கரத்தை கணபதியின் முன்னே வைத்து பூசை பொருட்களும் வைத்து முறையாக பூசை செய்து பின்பு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவ நடுமையத்தில் மனதை நாட்டி "ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீகுரு கணபதி சுவாகா" என்ற மந்திரத்தை பதினாறு உரு செபித்தால்  கணபதி ஒளி வடிவில் உனக்கு காட்சி தந்து உனக்கு வசியமாவார். அப்படி கணபதியை வசியம் செய்தவர்கள் அஷ்டகர்மயோகம் செய்தால் அது அவருக்கு சித்தியாகும். மேலும் அறுபத்து நான்கு சித்துக்களும் செய்யும் வல்லமை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

                                              பகிர்வில் S. கலைச்செல்வன் M.A

சனி, 24 நவம்பர், 2012

ஆதி நாராயணி மந்திரம்



ஆதி நாராயணி
 
"ஓம் கிலிம் சவ்வும் ஸ்ரீம் ஹரீம் சர்வ சௌபாக்கியம் தேவி அருள் ஆனந்த ரூபி நாராயணி மமவசம் குருகுரு சுவாஹா".
இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 -உரு வீதம் ஐந்து நாட்கள் செபம் செய்ய மந்திரம் சித்தியாகும்.
                                                                           

                                                                  பூஜை முறை

கற்கண்டு, வடை,பாயசம்,தேன்,தேங்காய்,புஷ்பம்,சந்தனம் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்ய  வேண்டும்.                                                                            
                                                                இதன் நன்மை

இம்மந்திரத்தை சித்தி செய்தவர்கள் மஞ்சளை கையில் வைத்துக்கொண்டு மேற்குரிய மந்திரத்தை மனதால் 9 உருவேற்றி அம்மஞ்சள் மந்திரித்து கொடுத்து பூசிவர சொல்லவும். இம்மஞ்சளை குழந்தைகளுக்கு பூசினால் குழந்தைகளுக்கு வரும் எல்லாவித தோசமும் (பாலகிரக தோசம்) நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் இம்மஞ்சளை பூசிவர குழந்தை பாக்கியம் உண்டகும். திருமணம் ஆகாத கன்னி பெண்கள் இம்மஞ்சளை பூசிவர உடனே வரன் கிட்டும், திருமணம் முடியும். மங்கலமான காரியம் எல்லாம் நடக்கும். என்று மலையாள மாந்திரீகம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

சனி, 17 நவம்பர், 2012

காற்றே கடவுள் - கோரக்கர்


கடவுள் யார் ? எங்கே இருக்கிறார் ? எப்படி இருப்பார் ? கடவுள் என்று சொல்லப்படுவது எது ? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு கோரக்கர் கூறும் ஒரு சிறிய விளக்கத்தை உங்களுக்கா இங்கு பகிர்கிறேன்.

                                                                             காற்றே கடவுள் - கோரக்கர்


கோரக்கர்
 "
நாடான நாடதனிற் கடவுளென்று
நானிலத்திலாட்டு வித்தல் காற்று காற்று
கோடான கோடிதெய்வம் காற்றுக்கேதான்
கூறிவைத்தா ரல்லாது வேறொன்றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்றுமாகும்
அதுவகன்றா லகிலமுதலழிந்து போமே.(193)
                                   
                                        - கோரக்கர் சந்திரரேகை
பொருள் :
                                    உலகத்தில் கடவுள் என்று கூறுவதெல்லாம் காற்று, காற்றுமட்டுமே, கோடான கோடி தெய்வங்கள் இருப்பதாக சொல்வதும் இக்காற்றைத்தான், காற்றை கடவுளென்று கூறினார்களே தவிர வேறொன்றும் இல்லை. உலக இயக்கம் இயங்குவதும் காற்றால்தான் அது இல்லாவிட்டால் உலகம் அழிந்து போய்விடும் என்கிறார் கோரக்கர்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

நத்தைச் சூரி கற்பம் - கருவூரார்

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர்கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
  செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
  சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
  சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.

சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
  சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
  நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
 ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
 

 மைந்தனே மலைகளெல்லாம் நொருக்கலாமே.


நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
  நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
 நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
  நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
  நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே
.

                                           -கருவூரார் பலதிரட்டு 300


பொருள்:       

  உலகத்தில் உள்ள எல்லாவகை மூலிகைக்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. இதன் மகத்துவத்தை அறிந்த பெரியோர்கள் இக்கற்பத்தை உட்கொள்வார்கள். எட்டு சித்துக்களும் இதற்குள்ளாகும்.

நத்தைச் சூரியைத் தினமும் உண்டுவர உடல் இறுகும். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரிக்கு காப்புகட்டி  பிடுங்க வேண்டும். அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்து முழுச்செடியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சம அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்ண நூற்றி இருபது நாள் ஒரு நாளாகும்(நீண்ட ஆயுள் உண்டாகும்). அதிக வலிமை உண்டாகும். நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகும்.


நத்தைச் சூரி விதையைத் தினமும் சாப்பிட்டு வர நூறூழி காலம் இருக்கலாம்(நெடுங்காலம்). அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகும். இக்கற்பம் இருக்கும் போது வேறு கற்பங்களை தேடாதே இதனால் வியாதிகளும், எதிரிகளும் நம்மை நெருங்கமுடியாது. இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். நத்தைச் சூரி மூலிகையை தலையில் வைத்துக்கொள்ள தேவதைகள் வசியமாகும் என்கிறார் கருவூரார்.
                                                
 பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

செவ்வாய், 6 நவம்பர், 2012

பாதாள அஞ்சனம்


                                        குப்பைமேனி வேர், வெள்ளைச்சாரணைவேர்

                                      வெள்ளெருக்கன்வேர், வெள்ளைக்காக்கணம் வேர்

                                                            வெள்ளைவிஷ்ணுகாந்திவேர்


      இவை ஐந்தையும் முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர்த்தி தீயில் கறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம், குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்கண்ட வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டான் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன்பின் புனுகு, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ இவைகளை வகைக்கு குன்றிமணி அளவு சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் ஆனதின் அடையாளம் தெரிய கல்வத்தின் அடியில் ஒரு ரூபாயை போட்டு அரைத்தால் அது மையில் தெரியும்.
                                                             
                                               
இதற்கு பூஜை மந்திரம்
 
ஓம் ஹ்ரிம் ஐம் மதன மேகலே மமகார்யம் ஸாதய ஸாதய ஸ்வாஹா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் பனிரெண்டு நாள் செபித்தால் மை உயிர் பெறும்.அதன் பின் தான் உபயோகத்திற்கு ஆகும்.

நிவேதனம் செவ்வலரி புஷ்பம், சந்தனம், பன்னீர், பால், பழம், இளநீர், தேங்காய், பத்தி, சூடம், தயிர், பொங்கல் ஆகியவைகளை வைத்து தூபதீபம் காட்டி மையை பத்திரம் செய்யவும்.

                                                                     இதன் பிரயோகம்

இந்த மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம்.தண்ணீர், ஊற்று, தண்ணீருக்குள் இருக்கும் பொருள், மண்ணில் புதைந்துள்ள புதையல் முதலியனயாவும் தெரியும்.இது பாதாள அஞ்சனம் என்பதால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

                      பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

ஞாயிறு, 4 நவம்பர், 2012

மூட்டு வலி,குறுக்கு வலி நீங்க ...

மூட்டு வலி நீங்க...

1)முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

2)மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.

குறுக்கு வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும். 

புதன், 31 அக்டோபர், 2012

வால்மீகி இராமாயணம் உருவானது எப்படி...?


தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.

அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும் இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார். அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது. அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும் சொன்னார்.

ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச்சி பொங்கக் கூறினார்.  அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான். ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோபமடைந்தார்.
வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன் அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான் ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.அதன் அடிப்படையில் உருவானதே வால்மீகி இராமாயணமாகும்.

பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt.M.A
அறிவுமையம்